அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில், பவானி, ஈரோடு - 638301, ஈரோடு .
Arulmigu Sangameswarar Temple, Bhavani, Erode - 638301, Erode District [TM010224]
×
Temple History
தல வரலாறு
அழகாபுரி என்னும் நகரை ஆளும் செல்வத்திற்கு அதிபதியான குபேரன் பல சிவ தலங்களுக்கு சென்று வழிபட்டான், ஒரு நாள் தன்னுடைய புட்பக விமானத்தில் ஏறிவரும் பொழுது காவிரி, பவானி நதிக் கரையில் வளம் கொழித்திருக்கும் சோலைகளையும் அவற்றின் நடுவே தெய்வீக ஒளி பொருந்திய சமஸ்கிருதத்தில் பதரி என்று அழைக்கும் இலந்தை மரத்தையும் கண்டான். அவ்விடத்தில் புலியும் மானும், பசுவும், யானையும் சிங்கமும், எலியும் நாகமும் பகையின்றி ஒருங்கே ஆற்றங்கரையில் நீர் உண்டு விளையாடும் அற்புதத்தையும் பார்த்தான்.
அந்தத் திருத்தலத்தில் தவம் நிறைந்த முனிவர்களும், யோகிகளும், கின்னரர், கந்தர்வர் முதலானோரும் குழுமியிருந்தனர். இந்த காட்சியைக்கண்ட குபேரன் உள்ளம் நெகிழ்ந்து வணங்கி நின்றான். அப்போது அசரீரி தோன்றி குபேரனே இவ்விடத்தில் வேதமே வடிவாகிய இலந்தை மரம்...அழகாபுரி என்னும் நகரை ஆளும் செல்வத்திற்கு அதிபதியான குபேரன் பல சிவ தலங்களுக்கு சென்று வழிபட்டான், ஒரு நாள் தன்னுடைய புட்பக விமானத்தில் ஏறிவரும் பொழுது காவிரி, பவானி நதிக் கரையில் வளம் கொழித்திருக்கும் சோலைகளையும் அவற்றின் நடுவே தெய்வீக ஒளி பொருந்திய சமஸ்கிருதத்தில் பதரி என்று அழைக்கும் இலந்தை மரத்தையும் கண்டான். அவ்விடத்தில் புலியும் மானும், பசுவும், யானையும் சிங்கமும், எலியும் நாகமும் பகையின்றி ஒருங்கே ஆற்றங்கரையில் நீர் உண்டு விளையாடும் அற்புதத்தையும் பார்த்தான்.
அந்தத் திருத்தலத்தில் தவம் நிறைந்த முனிவர்களும், யோகிகளும், கின்னரர், கந்தர்வர் முதலானோரும் குழுமியிருந்தனர். இந்த காட்சியைக்கண்ட குபேரன் உள்ளம் நெகிழ்ந்து வணங்கி நின்றான். அப்போது அசரீரி தோன்றி குபேரனே இவ்விடத்தில் வேதமே வடிவாகிய இலந்தை மரம் இருக்கிறது.
அதன் அடியில் சோதிமயமான லிங்கம் இருக்கிறது. நீ இந்த புண்ணிய தலத்தில் செய்யும் பூசை பல மடங்கு பலனைத் தரும் என்று கூறியது. அதனைக் கேட்ட குபேரன் சிரமேற் கைகுவித்து நின்று மனமுருகி இறைவனை வேண்டினான். குபேரனின் பூசையால் மனமகிழ்ந்த சிவபெருமான் தோன்றி நீ நினைத்த வரம் கேட்டால் வழங்குவோம் என்று திருவாய் மலர்ந்தருளினார். குபேரன் இறைவனை வணங்கி எம்பெருமானே அன்று எனக்கு அளித்த அழகாபுரியைப் போல் இந்தத் தலத்திற்கும் நினைக்கும் அப்பெயரே நிலவ வேண்டும் என்று வேண்டினான். இறைவன் அப்படியே வரத்தை வழங்கினான். அன்று முதல் இத்தலம் தட்சிண அளகை என்ற திருப்பெயர் பெற்று இறைவனுக்கும் அழகேசன் என்னும் திருநாமம் உண்டாயிற்று.
அசுரர்களுக்கு அஞ்சிய தேவர்கள் இங்கு வந்து சிவனை முறையாக பூஜை செய்து வழிபட்டார்கள். அதனால் இதற்கு விஜயாபுரி என்றும் வீரபுரி என்றும் பெயர் பெற்றன. பாற்கடலைக் கடைந்த போது அமுதம் எழுந்தது. அதனை அசுரர்கள் தேவர்களை மிஞ்சிக் கொண்டு அமுதத்தை அருந்துவதற்கு வந்தார்கள். அச்சமயம் திருமால் மோகினி வடிவம் எடுத்து அசுரர்களிடமிருந்து மீட்டு தேவர்களுக்கு வழங்கினார். எஞ்சிய அமுதத்தை ஒரு பொற்குடத்தில் நிரப்பி வைத்து பராசரர் முனிவருக்கு கிடைக்க செய்ய அதனை கருடனிடம் கொடுத்தனுப்பினார். கருடனும் அமுத குடத்தோடு புறப்பட்டு பவானிக்கும் காவிரிக்கும் மத்தியில் உள்ள பத்திரிகாவனமாகிய திருநணாவை அடைந்து சிவபெருமானை பணிந்து கொண்டு வந்த அமுத கும்பத்தை அங்கிருந்த பராசர முனிவருக்கு வழங்கினான். அதனைப் பாதுகாப்பான இடத்தில் வைத்து விட்டு பராசர முனிவர் தனது பர்ணசாலையில் வந்து தங்கினார். ஏமாற்றம் அடைந்த அசுரர்கள் வக்கிராசுரன், தண்டகாசுரன், வீராசுரன், வஞ்சபாசுரன் ஆகியோர் அசுரப் படைகளோடு அமுத குடத்தை தேடிப் பவானி கூடலை வந்தடைந்தார்கள். பராசர முனிவர் அசுரர்களுடைய வலிமையைப் போக்க எம்பெருமானை வழிபட்டார். எம்பெருமான் வேதநாயகியை வேண்டச் சொன்னார். வேதநாயகியிடமிருந்து ஏகவீரை, ஜயந்தி, மர்த்தினி, சண்டகாதினி என்ற துர்க்கையின் அம்சமுள்ள நான்கு சக்திகள் தோன்றி அசுரர்களை கொன்று பவானி கூடலைக் காவல் செய்து வருகிறார்கள். வக்கிராசுரனுடைய வேண்டுகோளின்படி இந்த நகருக்கு வக்கிரபுரம் என்ற பெயரும், சிவபெருமானுக்கு வக்கிரேசுவரர் என்ற திருநாமமும் அமைந்தது.
அசுரர்களின் தொல்லை எல்லாம் ஒழிந்த பின்னர் பராசர முனிவர் சிவபெருமான் சன்னதிக்கு நிருதி திசையில் ஆழ்ந்து கிடந்த அமுதகுடத்தை அகழ்ந்தெடுத்தார். பல நாட்களாகக் கல்லும், மண்ணும் நிறைந்த இடத்தில் புதைந்து கிடந்தமையால் அந்த அமுதம் கல்லைப் போலத் திரண்டு கடினமாக இருந்தது. பராசர முனிவர் அதை கண்டு வியந்து இது லிங்க வடிவாக விளங்குகிறது என்ற மகிழ்ச்சி பெற்று அதைப் பிரதிஷ்டை செய்ய எண்ணினான். அமுதம் புதைந்து கிடந்த பள்ளத்தை முனிவன் ஒரு தீர்த்தமாக்கி அமுத தீர்த்தம் எனப் பெயரிட்டு கங்கை முதலான நதிகளை அங்கே ஆவாகனம் செய்தார். உடன் இருந்த முனிவர்கள் தங்கள் கமண்டல தீர்த்தத்தை அதில் பெய்தார்கள். பின்பு பஞ்சாட்சரத்தை ஜபித்து மங்கல வாத்தியங்கள் முழங்க பராசரர் சங்கமேஸ்வரை வலம் வந்து அந்த அமுதத்தை லிங்க வடிவமாகத் திரட்டிப் பிரதிஷ்டை செய்தார். அமுதலிங்கத்திற்கு இறைவன் எழுந்தருளிக் காட்சி கொடுத்தார். அவர் இந்த அமுதலிங்கத்தை வழிபடுவோருக்கு வேண்டிய வரங்களைக் கொடுப்போம். எத்தகைய பிழையைச் செய்வாராயினும் மனம் இறங்கி இங்கே வந்து அமுத தீர்த்தத்தில் நீராடி, அமுதலிங்கத்தை வழிபடுவார்களால் அவர்களுடைய பாவத்தை போக்க நலம் உண்டாக்குவோம் என்று திருவாய் மலர்ந்தருளினார். அமுத லிங்கத்திலிருந்து அமுத தீர்த்தம் தோன்றி ஓர் ஊற்று எழுந்து காவிரி, பவானி ஆகிய நதிகளில் கலந்தது. ஆகவே முக்கூடல் ஆயிற்று, இத்திருத்தலம் மூர்த்தியாலும், தலத்தாலும், தீர்த்தத்தாலும் சிறப்பு பெற்றது.
இந்த பவானி. வேதநாயகி அம்மன் சந்நிதிக்கு நேர் எதிரில் கிழக்கு மதில் சுவரில் மூன்று துவாரங்கள் உள்ளன. அந்தத் துவாரங்கள் எப்படி ஏற்பட்டன என்பதற்கு ஒரு சுவையான வரலாறு உள்ளது. ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்டபொழுது இந்தப் பவானி தான் கோயம்புத்தூர் மாவட்டங்களுக்குத் தலைநகரமாக இருந்திருக்கிறது. 1804 ஆம் ஆண்டில் இங்கு வில்லியம் காரோ கலெக்டராக இருந்திருக்கிறார். இவர் அப்போது இத்திருக்கோயிலுக்கு அருகில் இருக்கும் பயணியர்கள் விடுதியாக இருக்கும் பங்களாவிலேயே தங்கி வாழ்ந்திருக்கிறார். தினசரி சங்கமேஸ்வரர் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வருவதையும், கூடுதுறையில் புனித நீராடுவதையும் கண்டிருக்கிறார். அதோடு வருபவர்கள் வேதநாயகி அம்மனின் அருளினைப் பற்றி அடிக்கடி பேசுவதையும் கேட்டிருக்கிறார். அவருக்கு இந்த வேதநாயகி அம்மனைத் தரிசிக்க வேண்டும் என ஆசை. இவரோ பிற மதத்தினர் என்பதால் கோயிலுக்கு வர அனுமதிக்கப்பட மாட்டார். இவரது ஆவலை அறிந்த அந்த தாலூகா தாசில்தார் அம்பிகையின் சந்நிதிக்கு நேர் எதிர் கிழக்கு மதில்சுவரில் மூன்று சிறு துவாரங்கள் செய்து அவற்றின் வழியாக அலங்கரிக்கப்பட்ட அம்பிகையைக் காண வகை செய்திருக்கிறார். அம்பிகையின் வடிவழகைக் கண்டு வழிபாடு செய்து வந்திருக்கிறார் கலெக்டர் வில்லியம் காரோ. இப்படியே தினசரி சிறுதுளை வழியாக அம்பிகையை கண்டு தரிசித்து வந்திருக்கிறார். ஒரு நாள் இரவு தம் பங்களாவில் தூங்கிக் கொண்டிருக்கும் போது வேதநாயகி அம்மன் தம்மை வெளியே போகும்படி சொன்னதாகக் கனவு கண்டிருக்கிறார். அப்படியே படுக்கையை விட்டு எழுந்து வெளியேயும் வந்திருக்கிறார். என்ன அதிசயம் இவர் வெளியே வந்த சில நிமிடத்தில் பங்களா கூரையே இடிந்து விழுந்திருக்கிறது. அன்னையின் அருளை உணர்ந்து கலெக்டர் வில்லியம் காரோ யானையின் தந்தத்தினால் ஒரு ஊஞ்சல் செய்து அவர் தம் காணிக்கையாக வழங்கியிருக்கிறார். இந்த ஊஞ்சலில் தன் பெயரையும் பொறித்து வைத்திருக்கிறார். இவ்வூஞ்சலில் காணிக்கையாக கொடுக்கப்பட்ட தேதி 11.1.1804 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றும் வேதநாயகி அம்மன் சன்னதியில் உள்ள பள்ளியறையில் தான் பிரிட்டிஷ் கலெக்டர் வில்லியம் காரோ கொடுத்த யானையின் தந்தத்தினால் ஆன ஊஞ்சலில் அம்மையும் அப்பனும் பக்தர்களுக்கு பள்ளியறை பூஜையில் காட்சி கொடுக்கின்றனர். இத்திருக்கோயில் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற பரிகார தலமாக விளங்குகிறது. இத்திருத்தலத்தில் உள்ள சங்கமேசுவரரை வணங்குவோர் காசிக்கும், இராமேஸ்வரத்திற்கும் சென்று வழிபட்ட பலனை பெறுவர்.